நபிகளாரின் உடன்பாட்டால் வெற்றி பெற்ற ஹுதைபியா உடன்படிக்கை
கண்மணி நாயகம் ரசூலே கரிம் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடியவர்களில் ஒருவரான முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் கூறும்போது, ‘நீ பிறக்கும் போது பூமி வெளிச்சமானது; உன் ஒளியால் வானம் பிரகாசமானது’ என் வர்ணித்தார்.
நபிகளாருக்கு நபி பட்டம் கிடைப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி அவர்களின் தலையாய பண்புகளாக என்றும் உண்மையே பேசுவது , நம்பிக்கை துரோகம் செய்வதில்லை, கொடுத்த வாக்கை மீறுவதில்லை என ஒரே நிலையில் தான் இருந்தார்கள். இதன் காரணமாகவே அவர்களை பகைவர்கள் கூட தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
நாயகத்தின் நாற்பதாவது வயதில் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி முலம் அல்குர்ஆன் வழங்கப்பட்டது. மனித குலத்திற்கு அருட்கொடையாக அல்லாஹ்வின் வேதத்தை அதாவது அல்லாஹ் ஒருவன், இணையற்றவன், வணக்கத்திற்குரியவன் என் போதிக்க உத்தரவு கிடைத்தது.
மக்கா நகர மக்கள் அதாவது குறைஷிகள் அவரை இறைத்தூதராக ஏற்க மறுத்தனர்; மாறாக விரோதியாக கருதினர். இழிவுப்படுத்தினர், துன்பத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாக்கப்பட்டார்கள். நாயகத்தைக் கொல்லவும் திட்டமிட்டனர். இத்தருணத்தில் தான் நபிகள் நாயகத்திற்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் மதீனா செல்ல அல்லாஹ்விடமிருந்து அனுமதி வந்தது. அதன்படி மதீனா வாழ் மக்கள் அதாவது அன்சாரிகளின் அழைப்பின் பேரில் மதீனா சென்று இஸ்லாத்தை நிலை நாட்டும் முயற்சியில் இறங்கினர்.
மதீனா அன்சாரிகள் நபிகளாரின் தலைமைத்துவத்தை ஏற்று, அவர்களுடன் வந்த மக்காவாசிகள், அதாவது முஹாஜிரின் என்றழைக்கப்பட்ட வர்களுக்கும் முழு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு உடமைகளில் சரிபாதி பங்கிட்டுக் கொடுத்தனர்; இஸ்லாத்தில் சகோதரத்துவம், உம்மத் என்ற பந்தம் உருவாக்கப்பட்டு , மதீனாவில் இஸ்லாம் நிலைநாட்டப்பட்டது. அதன் பின்னர் மக்கா முழுமையாக இஸ்லாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வசமானது. அதனைத் தொடர்ந்து அரேபிய கண்டமே இஸ்லாத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகப் பெரிய அரசதந்திர நடவடிக்கை ஹுதைபியா உடன்படிக்கையாகும். அந்த உடன்படிக்கை வழிதான் மக்கா போரின்றி , ரத்தம் சிந்தாமல் மிகவும் அமைதியான முறையில் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதைப்பற்றி விவரமாக ஆராயும் கட்டுரை தான் இது.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைமுடி இறக்கப்பட்டு கையில் சாவியுடன் காபாவிற்குத் தலைவராக இருப்பது போன்று ஒரு கனவு காண்கிறார்கள். அதன் அடிப்படையில் சஹாபாக்களை அழைத்து எழுபது ஒட்டகங்களுடன் உம்ரா செய்ய புறப்படுகிறார்கள். குறைஷிகள் தாக்க நேரிடலாம் என்ற அச்சத்தால் ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி கேட்டனர் சஹாபாக்கள்; அதற்கு நபிகளார் நான் ஆயுதம் ஏந்தமாட்டேன் ; ஏனெனில் நாம் செல்வது உம்ராவாகும் எனக் கூறி குர்பான் பிராணிகளான ஒட்டகங்களுக்கு குர்பான் அடையாளமாக மாலை அணிவித்து லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற கோஷத்துடன் கம்பீரமாக புறப்பட்டார்கள்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அதிர்ச்சி அடைந்து சமுதாய தலைவர்களின் அமைப்பைக் கூட்டி விவாதித்தனர். இந்த நிகழ்வை மார்டின் லிங்ஸ் என்பவர் பின்வருமாறு விவரிக்கிறார்;
ஆயிரத்திற்கும் மேலான அரேபியர்கள் அல்லாஹ்வின் புனித இல்லத்திற்கு புனித யாத்திரை செய்ய வருகிறார்கள். அவர்களைத் தடுப்பது மிகப் பெரிய துரதிஷ்டமாகும். அவர்களின் பாரம்பரியத்திற்கும் பெருந்தன்மைக்கும் அந்நாட்டின் அடிப்படைக்கும் சவாலாகும். அதே சமயத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக அனுமதித்தால் அவர்களுக்கு அது பெரிய தார்மீக வெற்றியாக அமையும். இந்த செய்தி அரேபியா முழுவதும் பரவும் எல்லோரின் உதட்டிலும் இருக்கும். குறைஷிகள் இதுவரை கண்ட தோல்விகளுக்கு இது முத்தாய்ப்பாக அமையும். அதற்கு மேலாக வருபவர்கள் உம்ரா செய்யும் பாரம்பரியமான நடவடிக்கைகள் இஸ்லாம் கூறும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம் தான் என்ற கூற்று உண்மையாகும் ஆகையால் எங்களில் ஒருவராவது உயிருடன் இருக்கும் வரை ஆண்டவனின் ஆணையாக இவர்கள் யாத்திரை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று சூலுரைத்தார்கள்.
குறைஷிகள் காலிட் தலைமையில் (காலிட் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்) 200 போர் வீரர்களுடன் காத்திருப்பதாக உலவாளிகளின் மூலம் செய்தி கேள்விப்பட்டதும், நபிகள் நாயகம் அவர்கள் மாற்று வழியில் கல்லும் முள்ளும் நிறைந்த பாதை வழியாக ஹுதைபியா செல்லும் பாதை அடைகிறார்கள். அங்கு சென்றடைந்ததும் , நாயகம் சவாரி செய்த கஸ்வா என்றழைக்கப்படும் ஒட்டகம் மண்டியிட்டு அதற்கு மேலும் நகர மறுத்தது. இதைப் பார்த்ததும் இதற்கு மேல் அவர்கள் செல்லக் கூடாது என்பது அல்லாஹ்வின் அறிவிப்பு என்று புரிந்து கொண்டார்கள்.
அப்போது நபிகளார் கூறுகின்றனர்; கஸ்வா ஒன்றும் முரண்பிடிக்கவில்லை , இது அதன் இயல்பான சுபாவம் இல்லை. எந்த யானையைத் தடுத்தானோ அவனே இதையும் தடுக்கின்றான். அவர் மேலும் கூறுகையில், குறைஷிகள் என்னிடம் இறைவனின் மதிப்பிற்கு பாதகம் இல்லாமல் எந்த சலுகை கேட்டாலும் அதை நான் கொடுப்பேன் என்றார்கள்.
அங்கு இளைப்பாறி கொண்டிருக்கையில் குசாஹ் கூட்டத்தின் தலைவன் புடைல் இப்னு வர்கா நாயகத்தைச் சந்தித்து குறைஷிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அதற்கு நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள்; நாங்கள் போரிட வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்தை வலம் வரவே வந்துள்ளோம் ; எங்களை யாரேனும் தடுத்தால் அவர்களை எதிர்ப்போம். ஆனால் அவர்கள் விரும்பினால் தேவைப்பட்ட நடவடிக்கைகள் ஒத்துக் கொண்டு வழிவிடலாம்.
புடைல் இந்த செய்தியை குறைஷிகளிடம் ஒப்புவித்தார்கள். இதற்கிடையில் பனு ஹரீத் கூட்டத்தைச் சார்ந்த ஹுலேஸ் அவர்கள் நபிகளாரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர்களின் சமாதான நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவ்வாறே குறைஷிகளிடம் தெரிவித்தார். இவர்களின் அறிவுரையை குறைஷிகள் ஏற்க மறுத்ததால் ஆவேசத்துடன் பின்வருமாறு கூறினார்; குறைஷிகளே! ஆண்டவனின் ஆணையாக நாங்கள் உங்களுடன் நட்பாக இருக்கிறோம்; இறை இல்லம் வலம் வர வந்திருப்பவர்களைத் தடுக்கலாமா? யார் கையில் என் உயிர் இருக்கின்றதோ முஹம்மது யாத்திரை செய்ய அனுமதியுங்கள். இல்லையெனில், அஹாபிஷ் கூட்டத்தினர் இந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்.
அதே சமயத்தில், தக்கீவ் கூட்டத்தைச் சார்ந்த உஸ்வாஹ் நபிகளாரைச் சந்தித்த பிறகு குறைஷிகளிடம் பின்வருமாறு கூறினார்; மக்களே நான் பல மன்னர்களுக்கு தூதரராக சென்றுள்ளேன் , சீசர்,கோரோஸ், நெருஸ் ஆகியோரைப் பார்த்துள்ளேன்.; ஆனால் முஹம்மதுவைப் போல் ஒரு மன்னரையும் சந்தித்தில்லை. அவர்களுக்கு சஹாபாக்கள் கொடுக்கும் மரியாதை அளப்பரியது; அவர்கள் ஆணையிட்டால் உடனே நிறைவேற்றப்படுகிறது. அவர்கள் உளு செய்யும் போது கொட்டும் நீரைப் பிடிக்க முந்துகிறார்கள். அவர்கள் பேசும்போது எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களை நேரில் பார்ப்பதைத் தவிர்த்து என்றும் கண்களை மரியாதை நிமித்தமாக பார்வையைத் தாழ்த்தியே இருக்கிறார்கள். அவர் உங்களுக்கு நல்ல சலுகை தர முன்வந்துள்ளார்; அதனை ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார்.
அதன் பிறகு சுஹேல் தலைமையில் குறைஷிகளின் தூதராக பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. பல காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு உடன்படிக்கை செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அலி(ரலி) அவர்களை ஒப்பந்தம் எழுத சொல்கிறார்கள். தொடக்கத்தில் பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதுவதை சுஹேல் மறுப்பு தெரிவிக்கிறார். அல்லாஹ் ரஹ்மான் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஆகையால், பிஸ்மிக்க அல்லாஹும்ம என்று எழுதப்படுகிறது. அதன் பிறகு இந்த ஒப்பந்தம் முஹம்மது – அல்லாஹ்வின் ரசூலுக்கும் சுஹேல் இப்னு அம்ர் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதனை சுஹேல் மீண்டும் எதிர்க்கிறார். நான் உங்களை ரசூல் என்று ஏற்றுக் கொண்டால் நான் உங்களுடன் போரிட்டு இருக்க மாட்டேன் என்றார்; எனவே, அந்த வாசகம் முஹம்மது பின் அப்துல்லாஹ்விற்கும் சுஹேல் இப்னு அம்ர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்று எழுதப்பட்டது. நபிகள் நாயகம் அவர்களின் கையாலேயே அல்லாஹ்வின் ரசூல் என்ற வார்த்தையை அழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹுதைபியா உடன்படிக்கையின்படி முதல் 10 ஆண்டுகளுக்கு போரை விட்டு விலகி இருக்க வேண்டும். இரண்டாவது , குறைஷிகளின் அனுமதி இன்றி முஹம்மதிடம் வந்தால் திரும்ப அனுப்பப்பட வேண்டும். முஹம்மதை விட்டு யாரேனும் குறைஷிகளிடம் திரும்பினால் அவர்கள்ஸதிரும்ப ஒப்படைக்கப்பட மாட்டார்கள். யாராக இருந்தாலும் முஹம்மது அல்லது குறைஷிகளிடம் பந்தம் அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வருடம் நீங்கள் திரும்ப செல்ல வேண்டும். எங்கள் விருப்பத்திற்கு எதிராக நீங்கள் மக்கா வரக்கூடாது. அடுத்த வருடம் நீங்கள் வருவதற்கு வழி விடுகிறோம். நீங்கள் உங்கள் சஹாபாக்களுடன் மக்கா வரலாம். மூன்று இரவுகள் தங்கலாம். பிரயாணிகள் எடுத்துச் செல்லும் ஆயுதம் மட்டுமே கொண்டு வரலாம். போர் வாள் அவற்றின் உறையில் தான் இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து வேறு எதுவும் கொண்டு வரக்கூடாது.
இந்த உடன்படிக்கை பற்றி இப்னு இஸ்ஹாக் சீறா ரசூலுல்லாஹ்வில் பின்வருமாறு கூறியுள்ளார்; இதற்கு முன் இஸ்லாம் கண்ட வெற்றிகள் பெரிதல்ல. இதற்கு முன் மாந்தர்கள் சந்தித்த போதெல்லாம் போரும் சச்ரவும் நிலவியது. இந்த உடன்படிக்கைக்குப் பிறகு போர் தடை செய்யப்பட்டது. மாந்தர்கள் அமைதியான நிலையில் சந்தித்தனர், கலந்து ஆலோசித்தனர். இஸ்லாம் அறிவாற்றலுடன் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்லாத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
