ஹஜ் – ஒரு வரலாற்று கண்ணோட்டம்!
ஹஜ் ,உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் மக்கா நகர் இறங்கியதும் காபாவை நோக்கிச் செல்லும்போது ;
‘லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வ‘நிமத்த லக்க வல் முல்க் லா ஷரீக்க லக்‘
(இதோ உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன், யா அல்லாஹ் இதோ உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ நான் வந்து விட்டேன், உனக்கு இணையில்லை, இதோ நான் வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் நன்றியும் உனக்கே உரியவை. மேலும் எல்லா அருள்வளங்களும் உன்னுடையதே. மேலும் அனைத்து ஆட்சியதிகாரமும் உனக்கே. உனக்கு இணை எவரும் இல்லை.)
என்று தல்பியாவை சொல்லிக்கொண்டே போவார்கள். ஹஜ் கடமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அல்குர்ஆன் இறங்கியபின் இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்று ஹஜ் என அறிவிக்கப்படவில்லை; மாறாக, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி காபாவை நிறுவிய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்தது.காலப்போக்கில் வணிகர்கள், வழிப்போக்கர்கள், மக்காவாசிகள் வெளியூர் சென்று திரும்பும்போது காபாவிற்கு சென்று ‘லப்பைக் அல்லாஹும்ம ‘லப்பைக்,…… என்று முழங்கி தவாஃப் செய்து, முடி இறக்கி , குர்பானி கொடுத்து 6 நாட்கள் அங்கு தங்கி செல்வது வழக்கமாகும்.இது நபிகள் நாயகம் பிறப்பதற்குப் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
யமன் நாட்டு மன்னர் குபா மக்காவுக்கு வருகை புரியும்போது காபாவை வலம் வந்து தலைமுடியை இறக்கிவிட்டு , குர்பானிட்ட இறைச்சியை மக்களிடம் விநியோகித்து மக்கள் அருந்த தேனும் கொடுத்திருக்கிறார். அதன் பின் அவர் கண்ட கனவின் காரணமாக காபாவை பேரீத்தம்பழ இலைகளால் மூடினார். அதனைத் தொடர்ந்து கண்ட கனவுக்குப் பின் யமன் நாட்டு துணியைக் கொண்டு மூடினார். இவர்தான் முதன் முதலாக காபாவை அவ்வாறு மூடினார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, அதற்கு கதவும் சாவியும் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
யமன் நாட்டு ஆட்சியை அப்ரஹா கைப்பற்றியபோது அக்காலகட்டத்தில் உலகில் எங்கும் காணமுடியாத அளவில் மிகப் பிரமாண்டமான ஆலயம் ஒன்றினை சனாவில் நிறுவி அனைவரும் அங்கு செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான். அவனது பிரதான நோக்கம் காபாவிற்குச் செல்லும் அரேபிய யாத்ரீகர்களை இந்த புதிய ஆலயத்திற்குத் திருப்ப வேண்டும் என்பதேயாகும். இந்த அப்ரஹாதான் யானை படையுடன் காபாவை அழிக்க மக்கா நகர் மீது போர் தொடுத்தான். அப்போது மக்காவின் தலைவராக அப்துல் முத்தலிப் இப்னு ஹஷீம் அவர்கள் இருந்தார்கள். அப்ரஹா அவர்களுக்குத் தாம் அங்கு போரிட வரவில்லை என்றும் காபாவை அழிக்க மட்டுமே வந்துள்ளதாகவும் வீணாக ரத்தம் சிந்துவதைத் தாம் விரும்பவில்லை; எனவே தமக்கு வழி விட வேண்டும் என்றும் ஒரு தூது அனுப்புகிறான். அதற்கு அப்துல் முத்தலிப் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா? உங்களுடன் போரிட எங்களுக்குத் சக்தி இல்லை என்று இறைவனுக்குத் தெரியும். காபா இறைவனின் இல்லம்; அவன் அதனைப் பாதுகாத்துக் கொள்வான்; என்றார்கள்.
குறைஷி மக்கள் காபாவைப் பூட்டிவிட்டு மக்கா சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைகளில் அடைக்கலம் தேடி சென்றனர். அப்ரஹா யானைப்படைகளுடன் காபா நோக்கிச் சென்றான். மக்கா நகர் அடைந்ததும் யானைகள் மண்டியிட்டு நகர மறுத்தன. அப்பொழுதுதான் அல்லாஹ் கடலிலிருந்து அபாபீல் பறவைகளை அனுப்பினான். ஒவ்வொரு பறவையும் காலிலும் வாயிலும் இரண்டு இற க்கைகளுக்கு இடையிலும் பருப்பு அளவிலான கற்களை வைத்திருந்தன. அந்த கல் யார் மீது விழுந்ததோ அவன் மடிந்தான்; அப்ரஹாவும் அடிப்பட்டான்;மிரண்டு ஓடினான். அவனது விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்தன என்றும் இதயம் வெடித்ததாகவும், இந்த நிகழ்வில் சுமார் 60,000 பேர் மடிந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் தாத்தா அப்துல் முத்தலிப் அவர்களின் கனவில் தூர்ந்துபோன ஜம் ஜம் கிணறு மீண்டும் தோண்டப்பட்ட வேண்டும் என்றும் அது எங்கே தோண்டப்பட வேண்டும் என்ற குறிப்பும் தெரிவிக்கப்பட்டது. ஜம் ஜம் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் தங்க குடங்களும், போர் வாளும் , கவசமும் புதையலாகக் கிடைத்தன. போர்வாளும் , கவசமும் காபாவின் கதவு செய்ய உபயோகப்பட்டன. காபாவின் கதவின்மேல் தங்கம் பூசப்பட்டது. இவ்வாறே முதன் முதலாக காபா தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன் , அவர்களுக்கு 35வயதிருக்கும்போது, குறைஷிகள் காபாவை உயர்த்தி கூரை போடும் பணியில் ஈடுபட்டனர். அவ்வேளையில், ஒரு கிரேக்கிய படகு புயலில் முற்றிலும் பாதிக்கப்பட்டு ஜுட்டா கடற்கரையில் ஒதுங்கியது. அதன் மரப்பலகைகளை காபாவின் கூரைக்கு உபயோகப்படுத்தினார்கள். குறைஷி கூட்டத்தினருக்கு வெவ்வேறு பகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடியும் தறுவாயில் , அஸ்வத் கல்லை யார் எடுத்து வைப்பது என்ற சர்ச்சை உருவானது. எல்லாரும் தான்தான் வைக்க வேண்டும் என்று சண்டையிடத் தொடங்கினர். பின்னர் , அமைதியாகப் பேசி ஒரு முடிவு எடுத்தனர்; அதாவது, யார் அன்றைய தினம் முதலில் காபாவின் வாசலுக்கு வருகிறாரோ அவரிடம் முடிவு செய்யும் உரிமையை கொடுப்போம் என தீர்மானிக்கப்பட்டது. சற்று நேரத்தில் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் அவ்வழியே வரவே ‘முஹம்மது வந்துவிட்டார்; நம்பிக்கையாளர் எனக் கூறி அவர்களிடம் பிரச்சனையைக் கூறினர். ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் ஒரு துணியைக் கொண்டு வரச் சொல்லி , அஸ்வத் கல்லை அவர்களே எடுத்து அத்துணியில் வைத்தார்கள். அங்கிருந்த கூட்டத்தினரை அழைத்து அனைவரும் சேர்ந்து அக்கல்லைத் தூக்கச் செய்தார்கள். வைக்கும் இடம் நெருங்கியதும் நபிகளார் அஸ்வத் கல்லை எடுத்து அவர்கள் கையாலேயே வைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
ஆதாரம் : தி லைஃப் ஆஃப் முஹம்மட் , எ டிரான்ஸ்லேஷன் ஆஃப் இப்னு இஸ்ஹாக்‘ஸ் சிராட் ரசூலுல்லாஹ் – ஏ.கில்லம் .
அனைவருக்கும் எமதினிய ஈதுல் அத்கா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
– ஹாஜி தாஜுதீன் சாகுல் ஹமீது
பெர்மிம் தலைவர்